Thursday, 24 April 2014

குரங்கிற்க்கும் உண்டு முன்னோர்கள்


ஒரு தொப்பி வியாபாரி பலதரப்பட்ட தொப்பிகளை ஒரு கூடையில் சுமந்த படி நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தான். மனிதன் என்றைக்கு காட்டை அழித்து ப்ளாட் போட்டு விற்று காசு பாக்க ஆரம்பித்தானோ அன்றைக்கு புரிந்த்து அவனுக்கு சூரியனின் உக்ரம். சூரியனின் உக்ரம் அந்த தொப்பி வியாபாரியையும் விட்டு வைக்கவில்லை. உக்ரம் மிக அதிகமானதால் மதிய உணவிற்க்கு பிறகு சிறிது ஓய்வு எடுக்க தீர்மானித்து ஒரு மர நிழலில் அயர்ந்து தூங்கினான்.

தூங்கி எழுந்த போது அவனின் தொப்பி கூடை காலியாக இருப்பதை கண்டு நான்கு முறை சிட்டிங் எம்.பி. ஐந்தாவது முறை தேர்தலில் டெபாசிட் இழந்த செய்தியை கேட்டது போல அதிர்ச்சியுற்றான். பிறகு அவன் நிழலுக்கு ஒதுங்கிய மரத்தில் இருந்த குரங்குகள்தான் அவன் கூடையில் இருந்து தொப்பியை எடுத்து சென்று விளையாடி கொண்டிருந்ததை கண்டான். அப்போது அவன் முப்பாட்டணார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

அவனது முப்பாட்டனாரும் ஒரு தொப்பி வியாபாரி (மூண்ரு தலைமுறையா முன்னேறவே இல்லை போல). அவர் வியாபாரம் செய்து இது போல ஓய்வு எடுக்கும் போது கூட இதே மாதிரி குரங்குகள் சில தொப்பிகளை எடுத்து கொண்டு மரத்தின் மீது ஏறி தொப்பிகளை தர மறுத்தன. அப்போது அவன் அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து குரங்குகளை மிரட்ட முற்ப்பட்டான். அவனை பார்த்து குரங்குகளும் தங்கள் பங்கிற்க்கு மரத்தில் உள்ள கிளைகளை ஒடித்து அந்த வியாபாரியின் மீது எறிய தொடங்கின.

தாம் செய்ததை குரங்குகளும் அப்படியே செய்கின்றன என்று ஊர்ஜித படுத்திக்கொண்டு தன் தலையில் அணிந்துள்ள தொப்பியை எடுத்து கீழே வீசினான் அந்த வியாபாரி. அதை பார்த்த குரங்குகளும் தத்தம் தலையில் அணிந்திருந்த தொப்பிகளை கீழே வீசின. கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட கேப்டனை ஒரே அமுக்காக அமுக்கிய பா.ஜ.க.வை போல எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு நடையைக்கட்டினான் அந்த வியாபாரி.

தொப்பி வியாபாரியின் பாட்டணார் பயன் படுத்திய அந்த உத்தியை தானும் பயன் படுத்தி தொப்பிகளை குரங்குகளிடம் இருந்து மீட்க ஆயுத்தமானான். தன் பாட்டணார் போல தன் தலையில் உள்ள தொப்பியை கீழே எடுத்து வீசினான்.

இதை மரத்தின் மேலே இருந்து பார்த்த குரங்குகளில் ஒன்று விறு விறு என்று கீழே இறங்கி வந்து வியாபாரி தன் தலையில் இருந்து வீசிய அந்த தொப்பியையும் எடுத்துக்கொண்டு மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்து கொண்ட்து. வியாபாரி செய்வது அறியாது விழிக்கும் போது அந்த குரங்கு சொன்னது "மனிதர்களாகிய உங்களுக்கு மட்டும்தான் முன்னோர்கள் இருப்பார்களா? அவர்கள் உங்களுக்கு மட்டும்தான் புத்தி மதி கூறுவார்களா?" விஷயம் புரிந்த வியாபாரி வாயடைத்து போய் நடையை கட்டினான்.

Translate