Wednesday, 27 August 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்






உணவே மருந்தாகி இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாகி விட்ட காலம் ஆனது கசப்பான உண்மை. பசிக்கு மட்டுமே உண்ணும் வழக்கம் இன்றி, உண்ணும் உணவு நம் உடலுக்கும் தட்ப வெட்பத்துக்கும் ஏற்றவாறு அமையப்பெற்றது நம் நாட்டின் உணவு பழக்கவழக்கங்களின் தனிச்சிறப்பு. நம் உணவு வகைகளின் அருமை பெருமைகளை போதிய அளவு நம் இளையதலைமுறைக்கு எடுத்து சொல்ல ஆளில்லாததால் மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகளின் மீது நம்மவர்க்கு மோகம் அதிகரிக்க காரணமாகிவிட்டது. அதற்கு நம் அரசாங்கமும் துணை நிற்பது துரதிஷ்டம்.

உடலுக்கு தீங்கு இழைக்காததோடு வலு சேர்க்கும் கம்மங்ககூழும், திணை அரிசியும் அலங்கரித்த நம் உணவு பழக்கவழக்கங்களில் சத்து இல்லாத பாலிஷ் செய்யப்பட்ட அரிசி கலந்தது அவலம். பீட்ஸாவும், பர்கரும் மட்டுமே உடலுக்கு கேடு விளைவிக்ககூடியவை அல்ல. பார்க்க பளிச்சென்று இருப்பதற்காக பாலிஷ் செய்யப்பட அரிசியும், மைதா கலந்த கோதுமை மாவும் பிஸ்கட் வகைகளும், ரசாயனம் கலந்த ஜூஸ் வகைகளும் கூட உடலுக்கு பல உபாதைகள் தரக்கூடியவையே.

சுதந்திரத்துக்கு பிறகு ஏற்ப்பட்ட உணவு பஞ்சத்தை போக்க நம் அரசாங்கம் நிறைய உற்பத்தியை நோக்கி நகர்ந்ததே தவிர நிறைவான உற்பத்தியை மறந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டு கம்பெனிகள் தாங்கள் தயாரித்த ரசயான உரங்களையும், மறுமுறை விதைக்க முடியாத மலட்டு விதைகளையும் பயன்படுத்த நம் விளைநிலங்களை சோதனைக்கூடம் ஆக்கிவிட்டன. இதனால் நம் இயற்கை விவசாயம் பாதிக்கப்பட்டதோடு தற்போது அழிந்துவிடும் சூழ்நிலையில் உள்ளது.

மனித உயிர்களின் மீது அக்கறையுள்ளவர்களின் முயற்சியால் மீண்டும் வெகுசிலர் இயற்கை விவசாயத்தை (Organic Farming) நோக்கி செல்லதொடங்கியுள்ளது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம்.  அரசாங்கத்தின் உதவி இல்லாததால் இதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் போயிற்று. ரசாயன உரங்களை போட்டு மலடான நம் நிலங்களை மீட்டெடுத்து இயற்கை விவசாயத்துக்கு திருப்ப கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும். தினசரி வாழ்வாதாரத்துக்கே போராடும் நம் விவசாயிகள் அவ்வுளவு காலம் பொருளாதாரம் இன்றி தவிக்க இயலாது. இவையெல்லாம் தாண்டி சிலர் மட்டுமே இயற்கை முறையில் விவசாயம் செய்ய துணிந்துள்ளதால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களின் விலைகள் மற்ற பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்க காராணமாகிறது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு இந்த விலை வித்யாசத்தை மக்கள் பொருட்படுத்தாமல் ஆதரவு தருவார்களேயானால் காலம் செல்ல செல்ல இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புண்டு.

அந்த வகையில் யோகா குரு பாபா ராம்தேவின் முயற்ச்சியால் "பதஞ்சலி" பொருட்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவது வரவேற்கத்தக்கது. இதில் மளிகை பொருட்களான கோதுமை மாவு மற்றும் மசாலா பொருட்கள் முதல் அல்சர், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் தீர்க்கும் மருந்துகளும் உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்பனை செய்யபடுகின்றன. இவை நம் உடலுக்கு கெடுதல் வராமல் இருப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றன. அதிக அளவில் உற்பத்தி செய்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுவதால் இந்தியாவில் இவற்றின் விலைகள் மற்ற பொருட்களின் விலைகளை விட மிக குறைவாகவே இருப்பது மற்றொரு சிறப்பம்சம்.

ஆர்கானிக் பொருட்களை தேர்ந்தெடுபோம், ஆரோக்கியமான வாழ்வை பெற்றிடுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

எழுத்தறிவித்தல் (அக்சராப்யாசம்) - தவனேஷ்





               நான் முதன் முதலில் பள்ளி சென்ற நாள் இன்னும் என் மனதை விட்டு விலகுவதற்குள் என் மூத்த மகன் தவனேஷ் பள்ளி சேரும் நாள் வந்தது. அரசியலுக்கு அடுத்து பள்ளி / கல்லூரிகள் மிகப்பெரிய வியாபாரம் ஆகி பல வருடம் ஆன பிறகு என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினற்கு "நல்ல பள்ளியில்" கல்வி (நல்ல கல்வி என்பது கேள்விக்குறி) என்பது கொஞ்சம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

       வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவன் அரசு நடத்தும் பள்ளிகளில் தத்தம் பிள்ளைகளை சேர்த்து விடுவர். பணக்காரர்களுக்கு என்றே பிரத்யேகமாக உலாவும் பல ஹைடெக் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி விட்டதால் அவர்களுக்கும் கவலை இல்லை. இடையில் மாற்றிக்கொண்டு தவிப்பது நடுத்தர வர்க்கத்தினரே. அரசாங்க பள்ளியில் சேர்க்க மனமும் வறட்டு கவுரமும் இடம் தராது; ஹைடெக் பள்ளிகளில் சேர்க்க நமது பொருளாதாரம் இடம் தராது.

       நம்மில் பலர் நம் சக்திக்கு மீறி ஹைடெக் பள்ளியில் சேர்த்து பிறகு குழந்தையையையும் கஷ்டப்படுத்தி நாமும் கடன் தொல்லைகளில் சிக்கி தவிக்க நேரிடும்.  நல்லவேளையாக என் மனைவி ஹைடெக் பள்ளி மோகத்தில் திளைக்காதவளாக இருந்தமையால் அவள் படித்த "இராமகிருஷ்ண வித்தியாலயாவிலேயே" என் மகன்களை சேர்க்க முடிவெடுத்தோம்.

       "நல்ல பள்ளி" என்கிற கோட்பாடுகளுக்கு இணங்கும் விதமாக இந்த பள்ளி அமைந்துவிட்டது என்பதைவிட எங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்றவிதமாக இந்த பள்ளி அமையும் என்ற கணக்கும் என் மனைவிக்கு பிற்காலத்தில் வேலை கிடைக்கும் என்கிற கணக்கும் என் இளைய மகன் ஆகாஷ்க்கும் வேறு பள்ளி தேட வேண்டிய அவசியம் இருக்காது என்கிற கணக்கும் எங்களை அந்த பள்ளியை தேர்ந்தெடுக்க காராணிகள் ஆயின. (தற்போது அந்த பள்ளியின் கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் எங்கள் நெருங்கிய சொந்தம் என்பது வேறு விஷயம்).

       அரசு சமச்சீர் கல்வி அமுல்படுத்த பல காரணி இருந்திருக்கக்கூடும். ஆனால் என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் தத்தம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இது ஒரு விதத்தில் வசதியாகவே அமைந்தது. அதுயாதெனில் எந்த தனியார் பள்ளியிலும் (CBSE பள்ளி தவிர) சமச்சீர் பாட திட்டமே; வேறுபாடு யாதெனில் ஆசிரியர் சொல்லித்தரும் விதம் மற்றும் பாடத்திட்டம் தவிர வேறு என்ன அங்கே சொல்லித்தரப்படுகிறது என்பது ஆகும். அந்த வகையில் "இராமகிருஷ்ண வித்தியாலயா" பள்ளி பாடத்திட்டம்தவிர மனிதனுக்கு தேவையான நல்ஒழுக்கத்தை போதித்து வருவது வரவேற்க்கதக்கது.

       முதல் நாள் வகுப்பின் போது நெல்லில் பேர் எழுதுவதெல்லாம் வழக்கொழிந்து விட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது "இராமகிருஷ்ண வித்தியாலயா" பள்ளி இன்னும் அந்த வழக்கத்தை தொடர்வது பெற்றோர்களாகிய எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அந்த விழாவிற்கு எங்கள் குடும்பத்துடன் (என் அம்மா, என் மனைவி, இளைய மகன் ஆகாஷ்) சென்று எழுத்தறிவித்தல் (அக்சராப்யாசம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியைவிடவும் மன நிறைவை அளித்தது.

Why Is It not working for me..




       பி.பீ.ஒவில் (BPO) வேலை பார்ப்பது பல வேளைகளில் பல விதமான நெருக்கடிகளை தந்தாலும் துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் என்பது போல் அமைவது மாதம் தவறாமல் வரும் "நல்ல" சம்பளம் மற்றும் அங்கே நடைபெறும் சில சுவராசியமான சம்பவங்கள். அதிலும் குறிப்பாக நம் மேலாதிகரிகளை பற்றிய சுவராசியமான பதிவு என்றால் அதை பகிர்வதே தனி சுகம்.

       "சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்டா" என்கிற வடிவேல் பட வசனம் போல் எங்க ஆஃபிஸிலும் சில நம்பிக்கைகள் இருந்தன. அதுதான் தமிழன் வேலை செய்ய லாயக்கு, ஹிந்திகாரன் வேலை வாங்க லாயக்கு என்பது. ஆகையால் எங்களை "மேய்க்க" ஒரு பெங்காளியை அமர்த்தியது மேலிடம். "வேலை செய்ய தெரிந்தவனுக்கு வேலையை கொடு தெரியாதவனுக்கு ப்ரமோஷனை கொடு" என்பதற்கு எடுத்துகாட்டு போலும் அந்த பெங்காளி. வேலை பற்றிய அறிவுதான் எட்டாக்கனியாக இருக்கம் என்று நினைத்தால் அடிப்படை கணித அறிவும் அற்றவராக இருந்தார் அந்த பெங்காளி.

       எதுவும் தெரியாவிட்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளா தன்மை, தெரியாததையும் தெரிந்தமாதிரியே காட்டிகொள்ளும் தந்திரம் அனைத்தும் பெங்காளியிடம் "நிரம்பு வழிந்தன". ஆனைக்கும் அடி சறுக்கும் என்கிற பழமொழி இவரை பார்த்துதான் சொல்லி இருப்பார்கள் போல. அதை மெய்ப்பிப்பது போல பல சம்பங்கள் நடைப்பெற்று இருந்தாலும் அதில் உச்சமாய் அமைந்தது ஒரு சம்பவம்.

       என் நண்பன் ஒருவன் கணினியை கையாள்வதில் வல்லைமை படைத்தவன். மவுஸ் (Mouse) இல்லாமல் கீபோர்டிலேயே (Keyboard) நிறைய வேலைகளை செய்து முடிப்பதில் கை தேர்ந்தவன். தினமும் அவன் அருகே ஒரு அரைமணிநேரம் அமர்ந்து அவன் Keyboard கையாளும் விதத்தை கவனித்து தானும் அதே போல் "தேர்ந்தவனாக" வர வேண்டும் என்பது பெங்காலியின் ஆசை. தினமும் அவ்வாறே அரைமணிநேரம் அவன் அருகே அமைதியாக அமர்ந்து அவன் செய்வதை பார்ப்பது வழக்கமானது.

       BPOவில் வேலை பார்ப்பவர்க்கு Excel  அறிவு இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே போல் CTRL + C, CTRL + V தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.  நம் பெங்காளிக்குதான் கணினி பற்றிய அடிப்படை அறிவே இல்லையே. எனவே அனைத்தையும் ப்ரமிப்புடன் பார்ப்பதுபோல இதையும் ப்ரமிப்புடனே பார்த்து வந்தார். ஒரு இடத்தில் உள்ளதை பல வார்த்தைகளை வேறு பல இடங்களுக்கு மறுபடி டைப் செய்யாமல் இவன் எப்படி அனாசியாமாய் வர வைக்கிறான் என்பதை பெங்காளி பெரும் வியப்புடன் பார்த்து வந்தார்.

       சில நாட்கள் சென்று என் நண்பனிடம் நட்பு வளர்ந்தமையால் பெங்காளி வாய்விட்டு கேட்டே விட்டார்.
பெங்காளி     :      How is that possible to bring the same content to different places without typing it?

நண்பன்       :      I Just did a copy paste.

பெங்காளி     :              But how did you do that without touching the mouse?

நண்பன்               :               By using CTRL + C to copy the contents and CTRL + V to paste the contents.

பெங்காளி           :               Let me try to confirm whether it works for me too.

       என் நண்பனை அவன் டெஸ்க்டாபில் (Desktop) CTRL + C அமுக்க சொல்லிவிட்டு தன் லேப்டாப்பில் (Laptop) CTRL + V அமுக்குவிட்டு "Why isn't it working for me now?" என்று கோபமாக கேட்க என் நண்பன் முகத்தில் ஈ ஆடவில்லை.

Translate