Saturday, 20 October 2018

அசல்

லண்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.  நிகழ்ச்சியில் சார்லி சாப்ளின் போல வேடமிட்டுக் கொண்டு அவரைப்போலவே நடித்துக்காட்ட வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  யார் சார்லி சாப்ளின் போல தத்ரூபமாக நடிக்கிறாரோ அவருக்கு முதல் பரிசு.  மூன்று பரிசுகள் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆர்வமுள்ள பலர் அதில் கலந்து கொண்டார்கள்.  கடைசி நேரத்தில் விருப்பம் தெரிவித்து ஒரு இளைஞர் விண்ணப்பத்திருந்தார்.  அந்த நிகழ்ச்சியில் அந்த இளைஞரும் பங்கேற்றார்.

நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.  பங்கேற்ற அனைவரும் வெளுத்து வாங்கினர்.  சபையில் ஒரே ஆரவாரம்.  எல்லோரும் சார்லி சாப்ளின் போல அற்புதமாக நடித்துக்காட்டினர்.

கடைசியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.  கை தட்டல்! ஆரவாரம்! மூன்றாம் பரிசு கடைசி நேரத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்த இளைஞருக்கு அறிவிக்கப்பட்டது.  அந்த இளைஞரும் மகிழ்ச்சியுடன் மூன்றாம் பரிசினை பெற்றுக்கொண்டார்.

     மூன்றாம் பரிசு பெற்றுக்கொண்ட அந்த இளைஞர் வேறு யாருமில்லை.  அவர்தான் உண்மையான் சார்லி சாப்ளின்.

Translate