Tuesday, 22 October 2019

முதிர்ச்சி / பக்குவம் என்றால் என்ன?



1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை நாமே திருத்திக்கொள்வது.


2. அனைவரையும் அப்படியே  ஏற்றுக்கொள்வது. (அவர்களின் நிறை-குறைகளுடன்)


3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.


4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.


5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.


6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.


7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.


8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.


9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.


10. மன அமைதியை அடைதல்.


11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

13.  என்ன நடக்குமோன்னு நினைச்சா பயம்... என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சா தைரியம்... இவ்ளோதான் வாழ்க்கை.

காலம் போனால் வருமா?

கோச்ரப் ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தகாலம். காலம் தவறாமல் ஆசிரமத்துக்கு நன்கொடை வழங்கிவரும் செல்வந்தர் ஒருவர் ஆசிரமத்தில் காந்தியடிகளை சந்திக்க அவகாசம் கேட்கிறார்.

காலை 8.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்படுகிறது. மறுநாள் காலை 8 மணிக்கே ஆசிரமத்தை அடையும் செல்வந்தர் காந்தியை சந்திக்கும் விருப்பத்தை காந்தியடிகளின் செயலரிடம் தெரிவிக்கிறார். செயலரோ, “தயவு செய்து அமருங்கள். பாபு தங்களை 8.30மணிக்கு சந்திப்பார்” என்று நிதானமாகச் சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் செல்வந்தர் காந்தியடிகளின் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறார். அதிர்கிறார். பாபு கோதுமையில்இருக்கும் குறுணைகளையும், கற்களையும் நீக்கி சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

time-is-gold

சரியாக 8.30 மணிக்கு பாபு வரவேற்பறைக்கு வருகிறார். பாபுவிடம் சிறிதுநேரம் உரையாடிய பிறகு தான் வந்த நோக்கத்தை நிறைவு செய்துகொள்கிறார் செல்வந்தர். பின்னர்கிளம்பும் முன் பாபுவிடம் தயங்கியவாறே, “பாபு... நான் மிகவும் பணிச்சுமை உள்ளவன் என்பது தாங்கள் அறிந்ததே. நான் 8 மணிக்கெல்லாம் ஆசிரமத்தை அடைந்துவிட்டேன். ஆனாலும் 30 நிமிடம் காத்துக்கொண்டிருக்க வேண்டியாதாகிவிட்டதே. அதேநேரம் தாங்களும் ஏதும் முக்கியமான பணியில் இருந்ததாக தெரியவில்லை. கோதுமையைத்தான் தூய்மை செய்துகொண்டிருந்தீர்கள். என்னை சந்தித்துவிட்டு அதைச் செய்திருக்க கூடாதா” என்றார்.

பாபுவும் புன்னகைத்துக்கொண்டே சொன்னார் “நான் தங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்ட 8.30-க்கு சரியாகச் சந்தித்துவிட்டேன். ஒரு வேளை நீங்கள் 8 மணிக்கு வருவதாக நேற்றே தெரிவித்திருந்தால் அதற்கேற்றபடி திட்டமிட்டிருப்பேன். இது கோதுமை தூய்மை செய்வதோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல. அதை அரைத்து மாவாக்க வேண்டும். பின்னர் ஆசிரமத்திலுள்ள அனைவருக்குமான உணவு தயாரிக்கவேண்டும். எனக்கான பணியின் காலதாமதத்தால் அனைத்தும் காலதாமதமாகும். அதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. மன்னிக்கவும் உங்களுக்கு உங்களுடைய நேரத்தின் அருமையும் தெரியவில்லை. என்னுடைய நேரத்தின் அருமையும் புரியவில்லை” என்று முடித்தார் காந்தி. செல்வந்தர் தவறை உணர்ந்தார்.

Wednesday, 21 August 2019

``முதல்வரே பரிதாபத்துக்குரியவர்!'' - தோழர் ப.ஜீவா


"எந்த லட்சியத்துக்காக வாழ்கிறானோ, அந்த லட்சியத்துக்காகத் தன் உயிரையும் கொடுப்பதற்கு ஒருவன் தயாராக இருக்க வேண்டும்" என்றதுடன், தன் வார்த்தையின்படியே வாழ்ந்து, அதற்காகத் தன் உயிரையும் ஈந்தவர், அவர்.

ராஜாஜி முதல்வராய் இருந்த சமயம். சட்டசபை கூடியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுகின்றனர். சிலர், "கூடுதலாய் மருத்துவமனைகள் வேண்டும்" என்கின்றனர். இன்னும் சிலரோ, "ரேஷன் கடைகளை அதிகமாய்த் திறக்க வேண்டும்" என்கின்றனர். அனைத்தையும் கேட்ட பின், எழுந்து ராஜாஜி பதிலளிக்கிறார். "இன்று விவாதத்தில் பேசிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கு, 'அது வேண்டும்... இது வேண்டும்' என்றீர்கள். இது, வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், பரந்துவிரிந்த இந்த மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லாமல் போயிற்றே" என்கிறார். அத்துடன் அன்றைய சட்டசபைக் கூட்டம் நிறைவுபெறுகிறது.

மறுநாள் தொடங்கிய கூட்டத்தில் நம்மவர் எழுந்து, "நேற்று... நம் முதல்வர் அவர்கள், 'எம்.எல்.ஏ-க்களுக்கெல்லாம் தொகுதிக் கண்ணோட்டம்தான் இருக்கிறது, மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். அவர், வருத்தப்படத்தான் செய்வார். ஏனென்றால், இங்கே பேசிய ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்கள். அவர்கள் அந்தத் தொகுதியில் கடமையாற்ற வேண்டியது அவசியம்.

ஆக, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்காகத்தான் பேசுவார்கள். ஆனால், பாவம் நமது முதல்வருக்கு தொகுதியே கிடையாது. அவர், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற்று வரவில்லை. மக்களிடம் ஓட்டு வாங்கி வரவில்லை. பரிதாபத்துக்குரியவர். அவருக்கே தொகுதி இல்லை. அதனால், தொகுதிக் கண்ணோட்டத்தை நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது" என்றாராம். அதைக் கேட்டு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்ததுடன், மேஜையையும் தட்டி ஆர்ப்பரித்திருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் இப்படியெல்லாம், ஜாம்பவானாகத் திகழ்ந்த அவர், இன்றைய அரசியல்வாதிகளைப்போல் நட்சத்திர அந்தஸ்துள்ள சொகுசு பங்களாக்களில் வாழ்ந்தவர் இல்லை. சாதாரண ஒரு வீட்டில், அதுவும் மழைநீர் ஒழுகும் ஒரு வீட்டில் வாழ்ந்த எளிய மனிதர். அப்போதைய முதல்வர் காமராஜர், நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் வீட்டுப் பக்கமாகச் சென்றபோது, அவரது நிலைமையைப் பார்த்து, "நீங்கள் இந்தக் குடிசையில்தான் இருக்கிறீர்களா... நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன், வருகிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர், "இல்லை. இந்த நாட்டிலே வசிக்கிற எல்லா மக்களும் வீடுகட்டி வாழும்போது நானும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருகிறேன்" என்றாராம்.

இப்படி, கடைசிவரை எளிமை வாழ்வை வாழ்ந்த அவர், ஒருநாள் தன் அண்ணன் மகனை அழைத்து, "உன்னிடம் ஒரு சிறிய உதவி கேட்பேன், செய்வாயா?" என்றாராம். அதற்கு அண்ணன் மகன், "கேளுங்கள் அப்பா" என்றாராம். "200 ரூபாய் பணம் கொடு. பத்மாவதி சம்பளம் வாங்கியவுடன் தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும், அண்ணன் மகன் அழ ஆரம்பித்துவிட்டார்.

அதைப் பார்த்த நம்மவர், "எதற்கு அழுகிறாய்... அப்படி என்ன நான் கேட்டுவிட்டேன். நான் கேட்டதில் தவறும் எதுவுமில்லையே?" என்று வினவியுள்ளார். ஆனாலும் அவர் அழுதபடியே, "நீங்கள் ஒரு விரல் அசைத்தால் கொண்டுவந்து கொட்டுவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் என்னிடம் போய் இந்த 200 ரூபாயைக் கேட்டீர்களே" என்று வருத்தப்பட்டுக் கூறினாராம். யாரிடமும் கேட்காதவர், தன்னிடம் கேட்கிறாரே என்கிற வேதனையில்தான் அவருடைய அண்ணன் மகன் அழுதிருக்கிறார்.

அப்படிப்பட்டவர், கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது "சாவு என்னை நெருங்கிவந்தாலும் விரட்டியடிப்பேன். நான் ஏற்றுக்கொண்டிருக்கிற லட்சியத்தை, ஏந்தியிருக்கிற செங்கொடியை, நான் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியை, வாகைசூடவைத்துவிட்டுத்தான் நான் மடிவேன்; சாவையும் விரட்டியடிப்பேன்" என்றவரைத்தான் சாவு முந்திக்கொண்டு அள்ளிக்கொண்டுபோய்விட்டது. அவர்தான்... மக்கள் இதயங்களை வென்றெடுத்த மாமனிதர், ப.ஜீவானந்தம்.

Monday, 12 August 2019

கலாமின் தரிசனம்!

டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது திருப்பதிக்கு வருகிறார்.  திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்கள் வெகு நேரம் தரிசனத்திற்காகக் காக்க நேரிடும் எனக்கருதினார்.  எனவே எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.

ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.

வரவேற்பை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார் அப்துல் கலாம்.  ஆனால் ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை!  அங்கேயே நின்று கொண்டிருந்தார்!  அனைவருக்கும் திகைப்பு!

பின்னர் பிராதன அதிகாரியைப் பார்த்து ‘பிற மதத்தவர்கள் கையெழுத்திட்ட பின்பே இந்த ஆலயத்திற்க்குள் நுழைய முடியும்.  அதுதான் இந்த ஆலயத்தின் விதி!  அதற்கான குறிப்பேடு இங்குள்ளது.  அதை எடுத்து வாருங்கள்!  அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும்.  இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன்!

கூடியிருந்த அனைவருக்கும் ஒரு கணம் திகைத்து நின்றார்.  ‘இந்த பண்பு வேறு யாருக்கு வரும்’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் ‘பங்காரு வாகிலி’ எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம்.  அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது.  வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.


ஆலயத்தை வலம் வந்தார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்!  பிறகு அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், முதலியவைகளோடு பிரசாதங்களை ஆசி கூறும் வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.


அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து, “ஒரு நிமிடம்”... என்று சொல்லிவிட்டு, “தனிப்பட்ட முறையில் எனக்கென ஆசீர்வாதம் செய்வதைவிட, இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும்.  இந்திய மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்!.. இந்தியாவில் உள்ள அனைவரும் சகல வளங்களையும் பெற வேண்டும்!  என்று வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்!... எப்படியும் ஆசிகள் இந்தியனாகிய என்னையும் சேர்ந்துவிடும்!... என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

எப்பேர்ப்பட்ட உயரிய சிந்தனை!  நாட்டைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் அப்துல் கலாம் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுவோம்!

Thursday, 8 August 2019

ஆப்பிள் விதைகளில் சயனைடு!


சயனைடு ஒரு கொடிய நஞ்சு என்பது எல்லாருக்கும் தெரியும்.  அந்த கொடிய நஞ்சு நாம் விரும்பி உண்ணும் ஒரு பழ விதையில்  இருக்கிறது.  ஆப்பிள் விதைகளில் Amygdalin என்ற வேதிப் பொருள் உள்ளது.  

ஆப்பிள் விதைகளில் மட்டுமல்ல, பாதாம் தோல், இலந்தைப் பழம், செர்ரி பழம் ஆகியவற்றின் விதைகளிலும் இந்த Amygdalin உள்ளது.  இது உடலுக்குள் சென்று மற்றம் அடையும்போது ஹைட்ரஜன் சயனைடு என்ற நஞ்சை வெளியிடுகிறது.  விதையை முழுமையாக விழுங்கிவிட்டால், பாதிப்பு இல்லை.  விதையைக் கடித்து மென்று தின்றால் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.

மனித உடலுக்குள் 0.2 இலிருந்து 1.6 கிராம் வரை சயனைடு சென்றால் ஆபத்தானது.  இதயம் செயல் இழந்துவிடுவது, நுரையீரல் நின்றுவிடுவது, கோமா நிலை, தசைகள் செயல் இழந்துவிடுவது உட்பட பல பாதிப்புகள் ஏற்படலாம்.  மரணம் கூட ஏற்படலாம்.

1 கிராம் ஆப்பிள் விதையில் 1 முதல் 4 கிராம் Amygdalin இருந்தாலும், அது வெளிப்படுத்தும் சயனைடின் அளவு மிகவும் குறைவு.  எனவே குறைந்தது 200 முதல் 500 அப்பிள் விதைகளை ஒருவர் உட்கொண்டால் மட்டுமே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல, ஆப்பிள்  விதைகளும் நஞ்சாகும்.

Monday, 5 August 2019

Article 370 மற்றும் Article 35A என்றால் என்ன?


ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது காஷ்மீரின் மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காகச் சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள். அப்படிக் கொண்டுவரப்பட்டதுதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள்.





முதலில் உருவாக்கப்பட்ட 370-வது பிரிவில், ``மாநில அரசு என்பதற்கான அர்த்தம், குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு - காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாகச் செயல்பட முடியும்" எனக் கூறப்பட்டிருந்தது.


பின்னர் 1952 -ம் ஆண்டு 370-வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, `` மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு - காஷ்மீர் ஆளுநரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாகச் செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.



இந்தியாவின் முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும்,  ஜம்மு- காஷ்மீருக்கு தலைமை வகித்த ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே 1954 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954 ஆம் ஆண்டு சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். இது அரசியல் சட்டப்பிரிவு 370-ன் இணைப்பாக பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சட்டப்பிரிவு 35ஏ ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. 


Article 35Aவின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு -


➤ 35ஏ என்ற சட்டப்பிரிவானதும் சட்டப்பிரிவு 370ஐ அடிப்படையாகக் கொண்டது. இது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது.

➤ இந்த சட்டப்பிரிவானது காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் சிறப்பு அதிகாரத்தை அந்த அரசுக்கு வழங்குகிறது. அதோடு, அரசுவேலை, அங்கிருக்கும் நிலங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட இதரத்திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் யார் என்பதை அம்மாநில அரசே முடிவு செய்யலாம்.

➤ ஜம்மு காஷ்மீர் வரையரைப்படி அம்மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் எனப்படுபவர் “1911ம் ஆண்டுக்கு முன்பு அம்மாநிலத்தில் பிறந்தவர் அல்லது குடியேறியவர் அல்லது சட்டத்திற்குட்பட்டு அசையா சொத்துகளை வாங்கியவர் மற்றும் பத்து வருடங்களுக்கு குறையாமல் அம்மாநிலத்தில் குடியிருப்பவர்கள் காஷ்மீரின் பூர்வ குடிகள்” என்று வகுக்கப்பட்டுள்ளது.

➤ ஜம்மு- காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.   இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.

➤ காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.


➤ ஒரு பெண்ணின் குழந்தைகள், அம்மாநிலத்திற்கு வெளியே ஒருவரை திருமணம் செய்துகொண்டால், அந்த குடும்பம் இந்த சிறப்பு அந்தஸ்தை இழக்கும். பெண் ஒருவர் ஜம்மு&காஷ்மீரை சேராத ஒருவரை திருமணம் செய்தால் அவரது உரிமையை இழக்கமாட்டார் என்று 2002ம் ஆண்டு ஜம்மு&காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

➤ அந்த சட்டமானது பூர்வகுடி அல்லாத மக்கள் யாரும் அம்மாநிலத்தில் நிலம் வாங்கவோ, நிரந்தரமாக குடியேறவோ, அரசு வேலைகளைப் பெறவோ அல்லது இதர சிறப்பு சலுகைகளைப் பெறவோ முடியாது என்று தடைசெய்துள்ளது.  ஆனால் இவர்கள் பிற மாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

➤ சட்டப்பிரிவு 35ஏ வானது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954ம் ஆண்டு இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.


சட்டப் பிரிவு 370இன் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு -



➤ சட்டப்பிரிவு 370 என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் “தற்காலிக ஏற்பாடான” சிறப்பு அந்தஸ்து மற்றும் தன்னாட்சி அமைப்பை ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்குகிறது.

➤ இந்திய அரசியலமைப்பு XXI பிரிவின் படி, “தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு பகுதிகளான” ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகள் சட்டப்பிரிவு 370ன் கீழ் வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளும் மற்ற மாநிலங்கள் பெறும் எந்த அந்தஸ்துகளையும் பெறாது. உதாரணமாக 1965ம் ஆண்டுவரை அம்மாநிலத்தில் சர்தர்-இ-ரியாஷத்(sadr-e-riyasat) எனப்படும் அமைப்பு இருந்தது. அந்த அமைப்பின் படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றபிறகு ஐந்து ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆட்சி செய்வார். மற்ற மாநிலங்களில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தேவையில்லை.

➤ இந்த சிறப்புச் சட்டமானது, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் ஜம்மு&காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மஹாராஜா என்பவரால் நியமிக்கப்பட்ட அப்போதைய காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா என்பவரால் 1947ல் தொடங்கிய இதற்கான பணிகள் 1954ல் முடிவடைந்தது.

➤ ஷேக் அப்துல்லா 370 சட்டப்பிரிவானது அரசியலமைப்பின் தற்காலிகமான ஏற்பாட்டின் கீழ் இருக்கக்கூடாது என்றும் அது வலிமையான தன்னாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

➤ இந்த சட்டப்பிரிவின் படி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, தொலை தொடர்புத்துறை மற்றும் நிதியமைச்சகம் தவிர மற்ற சட்டங்களை அம்மாநிலத்தில் அமல்படுத்த, இந்த பிரிவின் கீழ் வரும் மாநில அரசின் ஒப்புதல் தேவை. அம்மாநில மக்களுக்கு இரண்டு விதமான சட்டங்கள் உண்டு. அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்களுக்கு உள்ள சட்டம் அம்மாநில  மக்கள் அல்லாதவர்களுக்கு பொறுந்தாது. இந்த அரசியலமைப்புச் சட்டப்படி ஜம்மு&காஷ்மீர் பூர்வகுடி அல்லாத மற்ற இந்தியர்கள் அந்த மாநிலத்தில் நிலங்களையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்க முடியாது.

➤ நிதி அவசரநிலையை மத்திய அரசால் இந்த மாநிலத்தில் கொண்டு வர முடியாது. சட்டப்பிரிவு 360ன் படி வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது போர் சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் அவசர நிலையை பிரகடனபடுத்த முடியாது.

➤ மாநில அரசு கேட்டுக்கொண்டால் தவிர மற்ற நேரங்களில் மத்திய அரசால் அம்மாநிலத்தில் அவசர நிலையை கொண்டு வரமுடியாது.

➤ சட்டவிதி எண் 370-ன் படி மாநிலத்தின் எல்லையைக் கூட்டவோ குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.  அவ்வாறு செய்வதற்கும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற திருத்தம் பின்னர் சேர்க்கப்பட்டது. 

➤ இந்திய மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

Sunday, 21 July 2019

மரியாதை!


வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவி பசிப் பிணி போக்கிய வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அச்சிடப்பட்டு ‘அருட்பா’ என வெளியிடப்பட்டது.  அப்போது யாழ்ப்பாணத்துப் பெரும்புலவர் ஆறுமுக நாவலரும், மற்றும் சிலரும் வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்தனர்.

நாயன்மார்களின் தேவாரம், திருவாசகம் ஆகியவையே ‘அருட்பா’ என சொல்லத் தகுந்தவை என்று வள்ளலார் எழுதிய பாடல்களை ‘மருட்பா’ என்றே அழைத்தல் தகும் எனக் கூறினார்.
வழக்கும் விசாரணைக்கு வந்தது.  நீதிமன்றத்தில் ஆஜராகும்படி வள்ளலாருக்குச் செய்தி அனுப்பப்பட்டது.  வள்ளலார் வழக்கில் ஆஜராக நீதி மன்றத்திற்க்குள் நிழைந்தார்.

அப்போது வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்த ஆறுமுக நாவலரும், மற்றவர்களும் எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர்.
நீதிபதி, ஆறுமுக நாவலரை நோக்கி, “எதிரியாகிய வள்ளலாரை எழுந்து நின்று வணங்கியது ஏன்?” என்று வினவினார்.

அதற்கு ஆறுமுக நாவலர், “அவருடைய பாடல்கள் தான் அருட்பா இல்லையே தவிர, அவர் உயர்ந்த சான்றோர், ஒழுக்கத்தின் திருவுருவம்.   எனவேதான் நான் அவருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் எழுந்து நின்றேன்” என மனமுருகிக் கூறினார்.

உடனே நீதிபதி, “நீரே அவரை சான்றோர் என்றும், ஓழுக்கத்தின் திருவுருவம் என்றும் கூறுகிறீர்.  எனவே அவர் எழுதிய பாடல்களும் ‘அருட்பா’ என்பது சரிதான்.  எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.” என்றார்.

Wednesday, 3 July 2019

கொடுப்பதற்கு தேவை மனமே!

நெடுந்தூரப் பயணத்துக்கிடையில் இளைப்பாற இடம் தேடி ஆலயம் ஒன்றில் அமர்ந்திருந்தனர் குருவும் சிஷ்யனும்.

அப்போது, பெரும் வணிகன் ஒருவன் அங்கு வந்தான். கட்டுக்கட்டாகப் பணத்தை அள்ளி உண்டியலில் போட்டான். கையோடு கொண்டுவந்திருந்த வியாபார ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தெய்வத்தின் காலடிகளில் வைத்து வணங்கினான். ஆலயத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தான்.

அதே நேரத்தில், இன்னொருவனும் கோயிலுக்குள் நுழைந்தான். அவன் தோற்றமே அவன் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது. தான் கொண்டுவந்திருந்த பொன்னையும் பொருளையும் வாரி எடுத்து உண்டியலில் போட்டான். மகிழ்ச்சி தவழும் முகத்தோடு தெய்வத்தின் முன்னால் நின்று பிரார்த்தித்தான். அவனும் பயபக்தியோடு பிரகாரத்தை வலம்வரத் தொடங்கினான்.

தட்டுத்தடுமாறியபடியே நடந்துவந்த ஒரு மூதாட்டி ஆலயத்துக்குள் நுழைந்தாள். தன் சுருக்குப் பையை எடுத்து, அதில் சேர்த்து வைத்திருந்த சில்லறைக் காசுகளை அள்ளினாள். உண்டியலில் போட்டாள். கருவறை இருக்கும் திசைக்குத் திரும்பி, தரையில் விழுந்து கும்பிட்டாள்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள் குருவும் சிஷ்யனும்.

‘‘அவர்கள் அனைவரது செயலும் ஏறக்குறைய ஒன்றுதான். இருந்தாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. என்னவென்று புரிகிறதா?’’ எனக் கேட்டார் குருநாதர்.

புரியாமல் விழித்தான் சிஷ்யன்.

‘‘சொல்கிறேன் கேள்..’’ என்று கூறி விட்டு, விளக்கமாகப் பேசலானார் குரு.. ‘‘கட்டுக்கட்டாக பணத்தைக் கொடுத்து, தன் புதிய வியாபாரம் லாபகரமாக நடைபெற வேண்டும் என பிரார்த்தித்தான் அந்த வணிகன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெற முயல்வது வியாபாரம் அல்லவா!’’

‘‘ஆமாம் குருவே..’’

‘‘இறைவன் தனக்கு அள்ளிக்கொடுத்ததில் ஒரு பங்கை கிள்ளியெடுத்து காணிக்கையாகத் திருப்பிச் செலுத்தினான் அந்த செல்வந்தன். ஒரு உபகாரத்துக்குச் செய்யும் பிரதியுபகாரம்தானே அது!’’.

‘‘ஆமாம் குருவே..’’.

‘‘அந்த மூதாட்டியின் பிரார்த்தனையில்தான் தெய்வீகம் இருக்கிறது. உண்டியலில் அவள் சேர்த்த நாணயங்கள் அவளுக்கு எப்படிக் கிடைத்தன என்று நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள். தெளிவு பிறக்கும்..’’ என்றார் குரு.

எழுந்து, குடுகுடுவென ஓடிச்சென்று அந்த மூதாட்டியை வழிமறித்தான் சிஷ்யன். அவளுக்கு பார்க்கும் திறன் இல்லை என்பதையும், அதனால்தான் தட்டுத்தடுமாறியபடியே நடக்கிறாள் என்பதையும் அறிந்தான்.

அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘‘உண்டியலில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’’ என்று கேட்டான்.

பொக்கை வாய்ப் புன்னகையுடன் அவள் பேசினாள்..

‘‘எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. ஆனால், அந்தக் குறை தெரியாமல் நான் வாழ வழிகாட்டியிருக்கிறான் இறைவன். குறையொன்றுமில்லை என் வாழ்க்கையில். இந்தக் கோவிலின் வாசலில்தான் பூஜைப் பொருட்கள் விற்று என் ஜீவனத்தை கவனித்துக்கொள்கிறேன்..’’

மூதாட்டி பேசப் பேச, விரித்த விழிகளுடன் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘விளக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. விளக்குக்காகவும் எண்ணெய்க்காகவும் நான் செலவழித்திருக்க வேண்டிய பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே வருவேன். எல்லாம் அறிந்த இறைவன் இந்தக் கிழவி மீது காட்டும் கருணையாலும், அவன் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையாலும், அந்தப்பணம் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டும். அதனால், அதை அவ்வப்போது உண்டியலில் போட்டுவிடுவேன். இப்போதும் அதைத்தான் செய்தேன்..’’ என்றாள் அவள்.

அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினான் சிஷ்யன். எழுந்து, கருவறைப் பக்கம் திரும்பி வணங்கினான். இறைவன் புன்னகைப்பதுபோல் இருந்தது.

நல்லதும் கெட்டதும்!

அன்று சிஷ்யனுக்கு கொஞ்சம் கடுமையான பயிற்சி கொடுக்க முடிவு செய்தார் குருநாதர்.

‘‘இன்று உணவு தயாரிக்கும் பணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். சமையல் பணிகளில் மூழ்கிப்போனார்.

ஏதோ ஒரு அனுபவம் தனக்குக் கிடைக்கப்போகிறதென சிஷ்யன் அனுமானித்துக்கொண்டான். நூல்களைப் படிக்கும் வேலையில் ஈடுபட்டான்.

உணவு நேரம் வந்தது. சாப்பிட வருமாறு அவனை அழைத்தார் குரு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்தமர்ந்தான்.

நான்கு தட்டுகளை வைத்திருந்தார் குரு. நான்கிலும் உணவு பரிமாறப்பட்டிருந்தது. எதை எடுப்பது எனத் தெரியாமல் குழப்பமாக குருவை நோக்கினான் சிஷ்யன்.

‘‘எதை வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம்..’’ என்றார் குரு.

ஒவ்வொரு தட்டையும் கவனமாகப் பார்த்தான் சிஷ்யன். ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் எனக் கவனித்தான்.

முதல் தட்டு, அவன் வழக்கமாக உணவு சாப்பிடும் சாதாரண அலுமினியத் தட்டுதான். அதில் அவன் வழக்கமாகச் சாப்பிடும் உணவு இருந்தது.

இரண்டாவவதாக இருந்ததும் அலுமினியத் தட்டுதான். ஆனால், அதில் தடபுடல் விருந்துக்குரிய உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மூன்றாவதாக இருந்தது ஒரு வெள்ளித் தட்டு. அதில் வழக்கமான உணவு மட்டுமே இருந்தது.

நான்காவதாக இருந்தது தகதகக்கும் தங்கத்தட்டு. அதில், தடபுடல் உணவு வகைகள் பறிமாறப்பட்டிருந்தன.

சரிதான், இன்று நமக்கான பாடம் இந்தத் தட்டுகளில்தான் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான் சிஷ்யன். ஓரிரு விநாடிகள் யோசித்தான்.

முடிவுக்கு வந்தவனாக, முதல் தட்டை எடுத்து உணவை உண்ண ஆரம்பித்தான். அவன் அந்தத் தட்டைக் கையில் எடுக்கும்வரை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த குரு, நிம்மதிப் பெருமூச்சுடன் நகர்ந்து சென்றார். அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தார். முடித்ததும், அவனுடன் உரையாடத் தொடங்கினார்.

‘‘நல்ல வேளை.. நீ தப்பித்தாய்! எச்சரிக்கை கொடுக்கும் வேலையை எனக்குக் கொடுக்கவில்லை..’’ என்றார் குரு.

‘‘என்னது.. தப்பித்தேனா?! என்ன சொல்கிறீர்கள் குருநாதா?’’ என்றான் சிஷ்யன்.

‘‘நான்கு தட்டுகளில் இரண்டில் விஷம் கலக்கப்பட்டிருந்தது..’’

சட்டென சிலையானான் சிஷ்யன்.

‘‘பதட்டம் வேண்டாம். நீ எடுத்துக்கொண்ட உணவில் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’

‘‘இதென்ன குருநாதா.. மிகவும் கடுமையான சோதனையாக இருக்கிறதே..’’ என்று கேட்டான் சிஷ்யன்.

அவனுக்கு விளக்கம் கூறத் தொடங்கினார் குரு..

‘‘முதல் தட்டில் இருந்தது நீ வழக்கமாகச் சாப்பிடும் உணவு. வழக்கமான அலுமினியத் தட்டுதான் அது. இரண்டாவதாக இருந்த அலுமினியத் தட்டில் விருந்துக்குரிய வகையில் சிறப்பான உணவு வகைகள் வைத்திருந்தேன். இந்த இரண்டு தட்டுகளிலும் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’.

இரண்டாவது தட்டை எடுத்திருக்கலாமோ என நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.

‘‘மூன்றாவதாக இருந்த வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த வழக்கமான உணவில் விஷமும் இருந்தது. அதையடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தட்டிலும் விஷம் கலந்த விருந்துதான் காத்திருந்தது..’’.

தங்கத்தையும் வெள்ளியையும் கண்டு பரவசப்படாத தனக்கு, தானே ஒரு சபாஷ் சொல்லிக்கொண்டான் சிஷ்யன்.

‘‘இப்படித்தான்.. நல்லதும் கெட்டதும் நம் முன் எப்போதும் அணிவகுத்து நிற்கும். எதைத் தேர்ந்தெடுப்பதென்பது நமக்கான சவால்தான்..’’ என்று குரு சொல்ல, மீதமிருக்கும் மூன்று தட்டுகளையும் உற்றுப் பார்த்தபடியே இருந்தான் சிஷ்யன்.

‘‘தேவைக்கு அதிகமாக விரும்பும் ஆசை உனக்கு இருந்திருந்தால் வெள்ளித்தட்டை எடுத்திருப்பாய். அதுவே பேராசையாக இருந்திருந்தால் தங்கத்தட்டைத்தான் எடுத்திருப்பாய்..’’ என்றார் குரு.

‘‘நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேனா குருவே?’’

ஆர்வத்துடன் கேட்ட சிஷ்யனுக்கு, பதில் சொன்னார் குரு.. ‘‘அப்படியும் சொல்லமுடியாது. தப்பிவிட்டாய் என்றுதான் சொல்லமுடியும். வழக்கம்போலவே எல்லாம் தொடரட்டும் என்றிருந்தால், வாழ்க்கை காட்டும் புதிய அனுபவங்களின் சுவையை அறியாமலேயே போய்விடும்..’’.

‘‘நான் இரண்டாவதாக இருந்த தட்டை எடுத்திருக்கலாம் என்றுதானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?’’ என்றான் சிஷ்யன்.

‘‘ஆம். புதிய முயற்சியில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் தாகம் உனக்கிருந்திருந்தால், நீ அதைத்தான் செய்திருப்பாய். அதில் இருந்த அருமையான உணவை அனுபவிக்கும் வாய்ப்பினை நீ இழந்துவிட்டாய். பேராசையோ, தேவைக்கு அதிகமாகச் சேர்க்கத் துடிக்கும் ஆசையோ தேவையில்லைதான். அதற்காக, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து அறிய சோம்பேறித்தனம் கொண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் புறம் தள்ளுவது புத்திசாலித்தனமில்லை. உன் புலன்கள் அனைத்தையும் நீ பயன்படுத்தவே இல்லை. பயன்படுத்தி இருந்தால், இரண்டாவது தட்டிலும் விஷம் இல்லை என்பதை உன் நாசி உனக்கு உணர்த்தியிருக்கும்’’ என்றார் குரு.

‘‘புரிந்தது குருவே’’ என்றவனிடம், இரண்டாவதாக வைக்கப்பட்டிருந்த உணவை எடுத்து, பத்திரமாக மூடிவைக்கச் சொன்னார்.

‘‘அதுதான் உனக்கான இரவு உணவு. அதுவரை கெடாது. அப்படித்தான் சமைத்திருக்கிறேன்’’ என்றார்.

‘‘நீங்கள் சாப்பிடவில்லையே குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

‘‘பாடம் நடத்துவதற்காகத்தான் என்றாலும், இரண்டு தட்டு உணவினை விஷம் கலந்து வீணடித்துவிட்டேன். அதற்கான தண்டனையாக இரண்டு வேளை உணவு எனக்கில்லை..’’ எனப் புன்னகை மாறாத முகத்துடன் கூறினார் குரு.

Tuesday, 2 July 2019

அனைத்தும் ஒன்றே!



ஊருக்குள் இருக்கும் தேவாலயத்தில் இருந்து பாதிரியார் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். சிஷ்யன்தான் அவரை வாசலில் நின்று வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றான்.

தேவாலயத்தில் நடைபெற இருக்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி குருநாதரிடம் வேண்டுகோள் வைத்தார் பாதிரியார். அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வணங்கி விடைபெற்றார்.

அவர் சென்றதும், ‘‘நீங்கள் அந்த விழாவில் கலந்துகொள்வீர்களா குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

இன்முகத்துடன் அவனைப் பார்த்தார் குரு. ‘‘ஆமாம்’’ என்றார்.

‘‘அது வேறு மதத்தினரின் ஆலயம். அவர்கள் வழிபடுவது வேறு ஒரு கடவுள். நாம் அங்கே போவது சரியாகுமா?’’ என்றான் சிஷ்யன்.

கடவுள் குறித்தான ஐயப்பாடுகளில் இருந்து முழுதும் வெளிவரவில்லை சிஷ்யன் என்பதை குருநாதர் புரிந்துகொண்டார். கனிவுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘குயவன் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தோமே.. நினைவிருக்கிறதா?’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே. நன்றாக நினைவிருக்கிறது’’ என தலையாட்டினான் சிஷ்யன்.

‘‘மறுபடியும் அந்த இடத்தை மனக்கண்களில் பார்த்துக்கொள். அவன் பிசைந்துவைத்திருந்த மண் ஒன்றுதான். ஆனால், அவன் உருவாக்கி அடுக்கிவைத்திருந்த பாத்திரங்கள் ஒன்றுபோலவே இல்லை. பானை, தட்டு, மூடி, ஜாடி.. என பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாகவே அந்தப் பாத்திரங்கள் இருந்தன. இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மண் என்ற ஒரே பொருள்தானே!’’ என்றார் குரு.

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்..

‘‘தங்கத்தைத் தரையில் இருந்து வெட்டி எடுக்கிறோம். அதில் இருந்து பலவிதமான ஆபரணங்களைச் செய்கிறோம். வளையல், தோடு, கொலுசு, நெற்றிச்சுட்டி.. என வெவ்வேறு வடிவத்தில் உருவாக்குகிறோம். ஆனால், எல்லா ஆபகரணங்களுக்கும் மூலப்பொருள் தங்கம்தானே!’’

‘‘உண்மை குருவே..’’

‘‘சூரியனின் கதிர்வீச்சை எடுத்துக்கொள்வோம். நிறப்பிரிகையால் பல வண்ணங்களாகத் தெரியும் சூரியனின் ஒளியில் அடிப்படையாக இருப்பது வெண்மை மட்டும்தானே..’’.

‘‘உண்மைதான் குருவே..’’

‘‘பால் தயிராகிறது.. தயிர் வெண்ணெய் ஆகிறது.. வெண்ணெய் நெய் ஆகிறது.. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பால்தானே! நீர் கொட்டும்போது மழையாகிறது.. விழும்போது அருவியாகிறது.. ஓடும்போது நதியாகிறது.. பின்னர் சங்கமித்தவுடன் கடலாகிறது.. ஆனால், அடிப்படையில் அது நீர் மட்டும்தானே!’’

‘‘ஆமாம் குருவே.. எல்லோருக்கும் பொதுவான பரம்பொருள் ஒன்றுதான். அது வடிவங்களாலும் பெயர்களாலும் மாறுபட்டிருந்தாலும் மூலாதாரம் ஒன்றுதான் என்ற உண்மை எனக்குப் புரிந்துவிட்டது..’’ என்றான் சிஷ்யன்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!

நாலு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது’’ என்றார் அவர். பக்கத்து ஊரில் இருந்து குருநாதரைப் பார்க்க அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்துபோகும் வெற்றிகரமான வணிகர் அவர்.

அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்தான் சிஷ்யன்.

தான் பட்ட கஷ்டங்களையும் பார்த்த சந்தோஷங்களையும் குருவிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் அவர்.

வெளியேறும் வரை அவரையே பார்த்துக்கொண்டே இருந்த சிஷ்யன், குருவிடம் விலகாத ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘‘என்ன மந்திரம் அது குருவே? ஒரே மந்திரத்தால் தொடர்ந்து ஒரு மனிதன் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியுமா என்ன?’’ என்றான்.

வாய்விட்டுச் சிரித்தார் குரு. சிஷ்யனை அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டார்.

‘&அவர் தான் அடைந்த சந்தோஷங்களை மட்டுமல்ல, சந்தித்த துயரங்களையும்தான் சொன்னார்.. கவனித்தாயா?’’ என்று கேட்டார் குரு.

‘‘ஆமாம் குருவே.. ஆனாலும் அவர் மகிழ்ச்சிகரமான மனிதராகவே இருக்கிறார். அதுதான் என் ஆச்சரியத்துக்கான காரணம்..’’ என்றான் சிஷ்யன்.

மறுபடியும் மனம்விட்டுச் சிரித்தார் குருநாதர்.

‘‘மாயமுமில்லை.. ஒரு மந்திரமும் இல்லை! வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள். இரண்டுமே நிரந்தரமானதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இதைத்தான் அவருக்கு என் ஆலோசனையாகச் சொன்னேன். அதை அவர் முற்றிலும் நம்பினார். முழுதாகக் கடைப்பிடித்தார். தோல்வியைக் கண்டு துவளுவதும் இல்லை. வெற்றியைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதுமில்லை. அதனால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்’’ என்றார் குரு.

‘‘புரிகிறது குருவே..’’ என்ற சிஷ்யனுக்கு புதிதாக ஒரு சந்தேகம்!

‘‘அதெப்படி குருவே.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் எப்படி நஞ்சாகும்?!’’ என்றான்.

அவன் கேள்வியையும் அவனையும் ரசித்தார் குரு.

‘‘நேற்று நம்மைச் சந்திக்கவந்த விவசாயி கொடுத்துச்சென்ற பழங்களில் பனம்பழம் ஒன்று இருப்பதைக் கவனித்தேன். இறைவன் உருவத்துக்கு முன்பாக அது வைக்கப்பட்டிருக்கும். பனம்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வா’’ என்றார். எடுத்துக்கொண்டு வந்தான் சிஷ்யன்.

‘‘பனம் பழம் என்ன சுவை என்று உனக்குத் தெரியுமா?’’ என்று அவனிடம் கேட்டார் குரு.

‘‘மிக மிக இனிப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் குருவே.. ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை..’’ என்றான் சிஷ்யன்.

‘‘இப்போது சாப்பிட்டுப் பார்..’’ என்றார் குரு. தன் கையில் இருந்த பனம்பழத்தை ருசிப்பதற்கு ஆவலானானான் சிஷ்யன். அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார் குரு.

தோலைப் பிதுக்கி, நார்நாராக இருந்த பனம்பழத்தைக் கடிக்க வாயெடுத்தான் சிஷ்யன்.

பழத்தில் அவன் பல் பட்டதும் நாக்கில் தேள் கொட்டப்பட்டவனாக கையை விலக்கினான். முகத்தைச் சுளுக்கினான். புன்னகைத்தார் குரு.

‘‘என்ன ஆனது?’’ என்றார்.

‘‘இவ்வளவு கசப்பை நான் சுவைத்ததே இல்லை..’’ எனக் கத்தினான் சிஷ்யன்.

‘‘இனிப்பின் உச்சம் கசப்புத்தான் என்பதற்கு இறைவன் நமக்கு இயற்கையில் காட்டியிருக்கும் அடையாளம் இந்தப் பழம். அவ்வளவு அதிகபட்சமான இனிப்பு கொண்டது இது. அதனால்தான் கசப்பாகத் தெரிகிறது. இதே பழத்தை நெருப்பில் சுட்டோ, நீரில் வேகவைத்தோ இனிப்பைக் குறைத்தே உண்பார்கள். அப்போது கசப்பு தெரியாது..’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே.. இப்போது ஒப்புக்கொள்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!’’ என்றான் சிஷ்யன்.

Friday, 26 April 2019

How do you treat people actually matters!


His Phone rang in temple by accident during prayers...

The pandit scolded him.

The worshipers admonished him after prayer for interrupting the silence.

His wife kept on kept on lecturing him on his carelessness till they reached home.

You could see the shame, embarrassment and humiliation on his face.

He has never stepped foot in the temple ever again.


That evening, he went to a bar.

He was still nervous and trembling.

He spilled his drink on the table by accident.

The waiter apologized, gave him a napkin to clean himself up.

The janitor also mopped the floor.

The female manager offered him a complimentary drink.

She also gave him a huge hug and kissed him while saying "Don't worry man. Who doesn't make a mistake?"

*He has never stopped going to that bar since then*

You can make a difference by how you treat people especially when they make mistakes.

கேட்பதற்கு தயங்காதே..


குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது.

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது.

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது.

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது.

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள்.

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை.

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார்.

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது.

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான்.

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும்.

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள்.

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்என்று யூகம் செய்யாதே’’ என்றது.

Translate