Sunday, 24 February 2019

பரிசும் கண்டிப்பும்!


     2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் பங்கேற்று உறையாற்றினார்.  அவரது பேச்சால் கவரப்பட்ட ஒரு அன்பர் கலாம் புறப்படும்போது அவருக்கு ஒரு வெட் கிரைண்டர் பரிசாக அளித்தார்.

     பரிசை வழங்கிய அன்பரிடம் கலாம், “எங்கள் வீட்டிற்கு வெட்கிரைண்டர் தேவைதான்.  ஆனால் இதனை நான் பரிசாக பெற்றுக்கொள்ளமாட்டேன்.  இதற்கான தொகையை செலுத்திவிட்டுதான் பெற்றுக்கொள்வேன்” என்று கூறி கிரைண்டருக்கான தொகைக்கு ஒரு காசோலையை எழுதி தன் உதவியாளரிடம் தந்து அதை பரிசளித்த அன்பரிடம் தரச்சொன்னார். 

     பரிசளித்த அன்பரோ காசோலையை வங்கியில் செலுத்தவே இல்லை.  அதற்கு காரணம், அது அப்துல்கலாம் கையொப்பம் இட்ட காசோலை என்பதால்.  காசோலையை பொக்கிஷமாக தன்னிடமே வைத்துக்கொண்டார்.  இரண்டு மாதங்கள் சென்றன.

     கலாமின் அலுவலகத்தில் இருந்து பரிசளித்த அன்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  “கிரைண்டர் வாங்கியதற்கான காசோலையை நீங்கள் இதுவரை வங்கியில் செலுத்தி பணம் பெறவே இல்லை.  நீங்கள் பணம் பெறாவிட்டால் இதுவரை பயன்படுத்தாமல் வைத்துள்ள வெட்கிரைண்டரை திருப்பி அனுப்புமாறு கலாம் சார் கூறிவிட்டார்...” என்று தெரிவித்தனர்.

     இதை அடுத்து வேறு வழியில்லாமல் பரிசளித்தவர் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக்கொண்டார்.

Translate