தேவர்கள்
உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை என்று கேள்வியுற்றான்
மேகநாதன். அதற்காக நீண்ட தவம்
செய்தான். தவம் பலித்தது! கடவுளும் தோன்றினார்.
“உனக்கு
என்ன வரம் வேண்டும்”.. என்றார் கடவுள்.
“அமிர்தம்
வேண்டும்..”
“சரி
தருகிறேன்.. ஆனால் அதை தரையில் வைத்தால் பலன் கிடைக்காது..” என்று கூறி வெள்ளி
குடம் நிறைய அமிர்தம் கொடுத்துவிட்டு மறைந்தார் கடவுள்.
அமிர்தத்தை
எவருக்கும் கொடுக்க நினைக்காமல் தான் மட்டுமே அருந்த நினைத்தான் மேகநாதன். அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி
நடந்தான். குறுக்கே சிறிய ஆறு
வந்தது. அப்போது மேகநாதனுக்கு வயிறு
சிறிது தொல்லை செய்தது. சற்று மறைவாக
ஒதுங்க நினைத்தான். கடவுள் கூறியபடி
குடத்தை கீழே வைக்க முடியாது.
அப்போது
ஆற்றின் பக்கம் ஒருவன் வந்துகொண்டிருந்தான்.
மேகநாதன், அவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி
வேண்டினான். ஆனால், குடத்தில் உள்ள
அமிர்தம் பற்றி சொல்லவில்லை.
“சரி
வைத்திருக்கிறேன்..”என்றான் புதியவன்.
அதை
திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், “அப்பனே.. குடத்தில் உள்ளது கொடிய
விஷம். மருந்துக்காக எடுத்துப்போகிறேன்;
தரையில் வைத்தால், சக்தி போய்விடும்! எனவே
தலையிலேயே வைத்திரு..” எனக் கூறி, புதர்களுக்கிடையே ஒதுங்கினான்.
தலையில் கலசத்தை சுமந்து நின்றவன் வெகுநாட்களாக வயிற்று
நோயினால் அவதிப்படுபவன். ஆற்றில்
விழுந்து, இறந்து விடலாம் என நினைத்து அங்கு வந்திருக்கிறான். கையில் விஷம் கிடைத்திருக்கிறது. இதையே குடித்து இறந்து விடலாம் என நினைத்து
குடத்திலிருந்த அமிர்தத்தை, விஷம் என நினைத்து ஒரு சொட்டு விடாமல், மட மட என குடித்து
முடித்தான். அவனுக்கு ஆச்சர்யமாய்
இருந்தது. குடித்து முடித்தவுடன் வயிற்று
வலி முற்றிலும் நீங்கியது! உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவியது!!
திரும்பி
வந்த மேகநாதன் வெள்ளி குடம் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டான்.
“ஐயா..
நான் தீராத வயிற்று வலிக்காரன்! தாங்கள்
கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கியது!
நான், இறக்க நினைத்து ஆற்றில் விழ வந்தேன். விஷம் கிடைத்ததால் அதை குடித்து செத்து போக
நினைத்தேன்; ஆனால் நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி
விட்டது.. நன்றி!” என்றான்.