Monday, 9 March 2015

அளவு


ஒரு குருவைப் பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார்கள். அவரை அழைத்து வர குதிரைக்காரன் ஒருவன் போயிருந்தான். அன்று பலத்த மழை. பிரசங்கத்தை கேட்க ஒருவரும் இல்லை.

"என்னப்பா, பிரசங்கத்தை கேட்க உன் ஒருவனை தவிர யாருமே இல்லைய..என்ன செய்யலாம்?" என்று குதிரைக்காரனிடம் கேட்டார் குரு .

"அய்யா நான் அதிகம் படிக்காதவன்.  நான் 30 குதிரைகள் வளர்க்கிறேன். நான் குதிரைக்கு புல் வைக்கப் போகும்போது, எல்லாக் குதிரையும் வெளியே போய் ஒரே ஒரு குதிரை மட்டுமே இருந்தாலும், அந்த ஒண்ணுக்கு மட்டும் புல் வெச்சுடுவேன்" என்றான்.




உடனே குரு கொஞ்சம் கூட தாமதிக்காமல் பிரசங்கத்தை ஆரம்பித்தார். பாவம், புண்ணியம், மந்திரம், தந்திரம், துவைதம், அத்வைதம் என்று நிறைய விஷயங்க்களைப் பிரசங்கம் செய்துவிட்டு குதிரைக்காரனிடம் "என் பிரசங்கம் எப்படி இருந்துச்சுப்பா?" என்றார்.



குதிரைக்காரன் சொன்னான், "அய்யா நான் குதிரைக்குப் புல் வைக்கும்போது ஒரு குதிரைக்கு வேண்டிய புல்லை மட்டும்தான் வைப்பேன். 30 குதிரைக்கு வைக்க வேண்டிய புல்லை ஒரு குதிரைக்கு வைக்கவே மாட்டேன்."


Translate