Thursday, 19 July 2018

மாமனிதர்

இரவு பத்து மணி.  தன் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் விரைந்தார் அவர்.  சென்னைக்கு செல்ல வேண்டும்.  பேருந்தில் அமர்ந்தார்.  வண்டி புறப்பட்டது.  பிள்ளைக்கு பத்து வயது.  நடத்துனர் வந்தார்.  பத்து வயது ஆகாத பிள்ளைக்கு அரை டிக்கெட் வாங்கினால் போதும் என்பது அப்போதைய விதி.  நடத்துனர் ஒரு முழு டிக்கெட்டையும் ஒரு அரை டிக்கெட்டையும் வழங்கினார்.  


பேருந்து புறப்பட்டது.  இரவு மணி பன்னிரண்டு ஆனது.  நடத்துனரை கூப்பிட்டார் அந்த பிள்ளையோடு வந்தவர்.  "என் மகனுக்கு பத்து வயது பூர்த்தி ஆகி இப்பொழுது முதல் பதினோரு வயது ஆரம்பமாகிறது, எனவே இன்னொரு அரை டிக்கெட் கொடுங்கள்" என்றார்.  நடத்துனர் அவர் நேர்மையை பார்த்து வியந்தார்.  பின் அவர் கேட்டபடி பயணச்சீட்டையும் வழங்கினார்.


அந்த பெரியவர் சில வருடங்கள் கழித்து சென்னை மாகாணத்துக்கு முதல்வர் ஆனார்.  வெளியூர் பயணம் முடித்து வீடு திரும்பினார்.  வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் அதன் டிக்கியில் இருந்து பலாபழம் ஒன்றை எடுத்து வைத்தார்.  இதை பார்த்த முதல்வர், "இந்த பழம் ஏது?" என்று வினவினார்.  அதற்கு அந்த ஓட்டுனர் "ஐயா, நீங்கள் தங்கியிருந்த விருந்தினர் தோட்டத்தில் காய்த்தது.  விடுதி காவலர் பறித்து ஐயாவுக்கு கொடுங்கள்" என்று தந்ததாக பதிலளித்தார்.  "அப்படியானால் இது சர்கார் சொத்து.. இதோட விலையை விசாரிச்சு அரசு கருவூலத்தில் கட்டிவிடு" என்று அப்போதே பணத்தை எடுத்து ஓட்டுனர் கையில் திணித்தார் முதல்வர்.


அந்த முதல்வரின் பெயர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.  1947ல் இருந்து 1949 வரை தமிழக முதல்வராக இருந்தார்.


Translate