Tuesday, 10 July 2018

ருத்ராட்ஷம்


வடமொழியில் ருத்ராட்ஷம் என்பதற்கு ருத்ரனின் கண்கள் என்று பொருள். ருத்ராட்ஷம் அணிபவரை அது கண்ணை இமை காப்பது போல காப்பாற்றும் என்பது ஐதீகம். ருத்ரன் என்பது சிவனை குறிக்கும். 

Ganitrus என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் ருத்ராட்ஷம்.  இந்த மரம் உலகத்தில் ஒரு சில இடத்தில் மட்டுமே காணப்படும். அவற்றுள் நேபாளத்தில் விளையும் ருத்ராட்ஷ மணிகள் தரத்தில் உயர்ந்தவையாக கருதப்படுகிறது.

இயற்கையில் ருத்ராட்ஷம் செம்மையும், கருமையும் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.  ருத்ராட்ஷத்தை நீரில் போட்டு அது மூழ்கினால் அது அசல்; மிதந்தால் அது போலி.  உணவு பொருட்களின் மீது சற்று உயர்த்தி பிடிக்கும்போது லேசான ஓர் அதிர்வினை ஏற்படுத்தி கடிகார முகமாக சுழலும். இதனை வைத்தும் ருத்ராட்ஷத்தின் தரத்தை அறியலாம்.  விஷம் கலந்த உணவு பொருட்களின் மீது வைக்கும்போது எதிர்ப்பு கடிகார முகமாக (Anti-Clockwise)  சுழலும்.

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை காணலாம். இதற்கு முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முக ருத்ராட்ஷம், ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முக ருத்ராட்ஷம் என்று பெயர்.   ஒரு முகம் முதல் இருபத்தியொரு முகம் கொண்ட ருத்ராட்ஷம் வரை உள்ளன. ஒவ்வொரு முக ருத்ராட்ஷத்துக்கும் ஒவ்வொரு குணமுண்டு.  எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது ஐந்து முக ருத்ராட்ஷம். ஐந்து முக ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும், எந்த காலக்கட்டத்திலும் அணியலாம்.




அகோரம், தத்புருஸ்ம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் சிவனின் ஐந்து முகங்ககள் இதற்கு அதிதேவதைகள்.  இதன் கிரகம் குரு.  குளிக்கும்போது ருத்ராட்ஷம் அணிந்து கொண்டால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

ரசாயனம் கலந்த சோப் வகைகள் அல்லது சுடுநீரில் குளிக்கும்போது ருத்ராட்ஷத்தை கழட்டி வைப்பது நல்லது. இல்லையேல் காலப்போக்கில் அது உடைந்துவிடக்கூடும். குளிர்ந்து நீரில் குளிக்கும்போது அணிவது நல்லது.

ருத்ராட்ஷம் அணிவது உயிரின் ஆத்மாவிற்க்காகவேயன்றி  உடம்புக்காக அல்ல.  ருத்ராட்ஷத்தை ஆண், பெண், சிறுவர் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமாலும் அணியலாம். திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்திய நேரங்களில் அணியலாமா போன்ற சந்தேகங்கள் பெரும்பாலானோர்க்கு வருவதுண்டு. இவையனைத்தும் இயற்கையான விஷயங்களே. எனவே இந்த காலத்திலும் ருத்ராட்ஷத்தை அணிவதில் தவறில்லை. 

நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும்போது அவற்றை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிவது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மா மகிழும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை, மது, மாமிசம் போன்ற உணவு வகைகள் உண்ணும்போது ருத்ராட்ஷத்தை கழட்டி வைப்பது நல்லது. இதை தவிர எந்த கால கட்டத்திலும் ருத்ராட்ஷத்தை கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று முதல் ஆறு மாத காலம் தொடர்ச்சியாக ருத்ராட்ஷம் அணியும்போது அது அணிந்தவரின் உடலுக்கேற்ப அதிர்வலைகளை உண்டாக்கும்.  எனவே  ஒருவர் பயன்படுத்திய ருத்ராட்ஷத்தை மற்றொருவர் பயன்படுத்த கூடாது.  

Translate