ஒரு நாட்டின் அரசன் அவ்வப்போது நாட்டை சுற்றிப்பார்க்க வெளியிடங்களுக்கு செல்வான். சென்ற இடத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் வேறு இடத்துக்குச் செல்வான். ஆனால் எங்கே சென்றாலும் அதிகாலையில் சூரியன் முகத்தில் விழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒரு முறை வெளியூரில் தங்கியிருந்தபோது அதிகாலை சூரியனை பார்க்க ஆயுத்தமாகி கொண்டிருக்கும்போது பிச்சைக்காரன் ஒருவன் அவன் எதிரில் வந்தான். கோபமடைந்த அரசன் வேகமாக பிச்சைக்காரனை கடக்க முயன்றபோது ஒரு கல் தடுக்கி காலில் சிறிய காயம் ஏற்ப்பட்டது.
கோவம் கொண்ட அரசன் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வரச்செய்து அவனை தூக்கிலிட கட்டளையிட்டான். இதைக் கேட்ட பிச்சைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான். எல்லாரும் பிச்சைக்காரனை ஆச்சரியமாக பார்க்க, அரசன் கோபத்துடன் "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டான்.
பிச்சைகாரன் சொன்னான், "அரசரே, நீங்கள் என் முகத்தில் விழித்ததனால் உங்களுக்கு காலில் சிறு காயம்தான் ஏற்பட்டது. நான் உங்கள் முகத்தில் விழித்ததினால் என் உயிரே போகும் நிலை வந்துவிட்டது. நான் இறந்தபின், மக்கள் அனைவரும் அந்த அரசர் முகத்தில் விழித்தால் சாவுதான் என்று பேசுவார்களே.. அதை நினைத்து சிரித்தேன்" என்றான். அரசன் தன தவறை உணர்ந்து உடனே அந்த பிச்சைக்காரனை விடுதலை செய்தான்.