Thursday, 29 March 2018

சமையல் டிப்ஸ்!


கொழுக்கட்டை மாவு பிசையும்போது ஒரு கரண்டி பால் சேர்த்துப் பிசைந்து கொழுக்கட்டையை வேக வைத்தால் விரிந்து போகாமல் இருக்கும்!

சீடை உருட்டும்போது ஊசியால் குத்தி பிறகு எண்ணையில் போட்டால் வெடிக்காது!

சப்பாத்திக்கு மாவு பிசையிம்போது கையில் சிறிது உப்பு தடவிக்கொண்டால் கையில் மாவு ஒட்டாது!

சப்பாத்தி செய்து பாத்திரத்தினுள் வைத்து மூடி கொஞ்ச நேரம் கழித்து எடுக்கும்போது சிறிது விரைப்பாக இருக்கும். இதைத் தடுக்க சிறு சிறு இஞ்சி துண்டுகள் 2 அல்லது 4 போட்டு வைத்தால் எப்போது எடுத்தாலும் மிருதுவாக இருக்கும்!

கத்திரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்திரிக்காய் நன்றாக குழையும்!

கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால் சேர்த்தால் கெட்ட வாடை வராது. பொரியலும் ருசியாக இருக்கும்!

பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைத்து சிறிது புளித் தண்ணீர் தெளித்து கலந்து வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து வதக்கினால் கசப்பே இருக்காது!

தாளிக்கும் எண்ணெய்யிலேயே சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் கறிகளைப் போட்டு வதக்கினால் அவை நல்ல நிறத்துடன் இருக்கும்!

புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்த பணியாரம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்!

ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் நான்கு ஐந்து பூண்டு பற்களைப் போட்டு அரைத்து, பஜ்ஜிமாவில் கலந்து விட்டு பஜ்ஜி செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.  கடலை மாவால் ஏற்படும் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்தால் இடியாப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்து அதனுடன் தேங்காய்த்துருவல் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு பச்சைமிளகாய், ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து வடை தட்டினால் சுவை கூடும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்தால் பாகற்காய் கசப்பு தெரியாது, சுவையும் கூடும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் தேக்கரண்டி ரவையைச் சேர்த்துக் கொண்டால் பூரி உப்பலாக வரும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்க விட்டால் சாதம் கசந்து போகும்.  அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு உப்பு, மஞ்சள்தூள், சேர்த்துக் கலந்து கொள்ளவும்.  அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால் சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இட்லி தோசைக்கு  உளுத்தம் பருப்பு அரைக்கும்போது  கொஞ்சம்  பெருங்காயப் பொடியைச் சேர்த்து  அரைத்தால்  கமகமவென்று  மணமாக இருக்கும்.

கறிவேப்பிலைத் துவையலுக்கு  உளுத்தம் பருப்புக்கு  பதில்  வேர்க்கடலையை  வறுத்து  அரையுங்கள். துவையல்  மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

சாம்பார்,  வற்றல் குழம்பு  ஆகியவற்றில்  காரம்  அதிகமாகிவிட்டால்  நல்லெண்ணெய்யை  ஊற்றி  கொஞ்சம்  கொதிக்க
விடுங்கள்,  காரம் குறைந்துவிடும்.

ஆவிவரும் வரை சூடாக்கி பின்னர்  குளிரவிட்ட எண்ணெய்யில்  ஊறுகாய்  போட்டால்  எளிதில்  பூஞ்சணம் பிடிக்காது.

வாழைக்காயைப்  ப்ரிட்ஜில்  வைக்கும்போது  அப்படியே  வைக்காமல்  இரண்டாக  நறுக்கி  வைத்தால் கறுக்காமல் அப்படியே  புதிது போல் இருக்கும்.

மசால்வடை  செய்யும்போது மாவு நீர்த்துப் போய்விட்டால்  இரண்டு  பிரெட்  துண்டுகளை  மிக்சியில்  பொடித்து,  மாவுடன் சேர்த்து  வடைதட்டினால்  வடை ருசி பிரமாதமாக இருக்கும்.

பூரிக்கிழங்கு  செய்யும்போது  அதில்  பொட்டுக்கடலையோடு  சோம்பு  சேர்த்து  அரைத்துக் கலந்தால்  அதன்  சுவையே  அலாதிதான்.

ரவா தோசை  மாவில்  ஒரு தேக்கரண்டி  நல்லெண்ணெய் சேர்த்தால்  தோசை  மொறு மொறுவென்று  சுவையாக இருக்கும்.

புதினா சட்னி  செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  தேங்காய்த் துருவலும், சிறிதளவு  வேர்க்கடலையும்  சேர்த்து  அரைத்தால்  சட்னி  சுவையாக இருக்கும்.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் கூடுதல் சுவையாக 
இருக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் பாத்திரத்தில் வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். 

ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

Translate